இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’

India 24-1 at Day 1 stumps trailing England by 181 runs after losing gill wicket early
India 24-1 at Day 1 stumps trailing England by 181 runs after losing gill wicket early

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

ஜாக் கிராவ்லியும், டாம் சிப்லியும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். ஆடுகளத்தில் கொஞ்சம் புற்கள் இருந்தன.இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களோடு தனது தாக்குதலை தொடங்கியது. 6-வது ஓவரில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேலை கேப்டன் கோலி அழைத்தார். அதற்கு உடனடி பலன் கிடைத்தது. அவரது பந்து வீச்சில் சிப்லிக்கு (2 ரன்) பந்து பேட்டில் உரசியபடி ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து ஜானி பேர்ஸ்டோ வந்தார். மற்றொரு தொடக்க வீரர் கிராவ்லி (9 ரன்) அக்‌ஷர் வீசிய பந்தை சில அடி இறங்கி வந்து விரட்ட முயற்சித்தார். சரியாக ‘கிளிக்’ ஆகாத அந்த பந்தை முகமது சிராஜ் எளிதில் கேட்ச் செய்தார்.

4-வது வரிசையில் நுழைந்த அபாயகரமான பேட்ஸ்மேனான கேப்டன் ஜோ ரூட்டை (5 ரன்) முகமது சிராஜ் காலி செய்தார். இன்ஸ்விங்காக சீறிய பந்தில் ரூட் எல்.பி.டபிள்யூ. ஆகிப் போனார். சிறிது நேரத்தில் பேர்ஸ்டோவையும் (28 ரன்) சிராஜ் வெளியேற்றினார். ஆடுகளத்தில் பந்து ஓரளவு சுழன்று திரும்பியது. ஆனால் முந்தைய டெஸ்ட் போன்று சகட்டுமேனிக்கு சுழற்சி இல்லை. பேட்டிங்குக்கும் உகந்த வகையிலேயே காணப்பட்டது. இருப்பினும் இங்கிலாந்து அணி 78 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. இதையடுத்து 5-வது விக்கெட்டுக்கு துணை கேப்டன் பென் ஸ்டோக்சும், ஆலி போப்பும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். முகமது சிராஜின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்திய பென் ஸ்டோக்ஸ், அஸ்வின், வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்சரும் பறக்க விட்டதுடன், தனது 24-வது அரைசதத்தையும் நிறைவு செய்தார்.

முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் சாய்த்தனர். பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. முதல் ஓவரிலேயே ஜேம்ஸ் ஆண்டர்சனின் வேகத்தில் சுப்மான் கில் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். அதன் பிறகு ரோகித் சர்மா- புஜாரா ஜோடி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 8 ரன், புஜாரா 15 ரன், களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Be the first to comment on "இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’"

Leave a comment

Your email address will not be published.