இங்கிலாந்து vs அயர்லாந்து: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குரிய தகுதி சுற்றான சூப்பர் லீக், இங்கிலாந்து vs அயர்லாந்து தொடரிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன்படி வெற்றிபெற்ற அணிக்கு 10 புள்ளிகளும், டிரா அல்லது முடிவுகள் இல்லாமல் போனால் இரு அணிகளுக்கும் தலா 5 புள்ளிகள் வழங்கப்படும். இங்கிலாந்து அணியில் சில மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்ளுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கேப்டன் இயான் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜாசன் ராய் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெற்றிருப்பதால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது. அயர்லாந்து அணியும் முடிந்த வரை வெற்றிக்குப் போராடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி 172 ரன்களுக்கு சுருண்டது. அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டெர்லிங் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

கிரேத் டெலானி ஓரளவுக்கு தாக்குப் பிடித்து 22 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஆன்டே பார்பிர்னி 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, கார்டிஸ் கேம்பர் மற்றும் ஆன்டே மிக்பிரேன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

ஆன்டே மிக்பிரேன் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்துக் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அயர்லாந்து அணியால் 172 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. சிறப்பாகப் பந்து வீசிய இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 28ஆவது ஓவரிலேயே வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் பெர்ஸ்டோ 2 ரன்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், இங்கிலாந்து அணிக்கு நெருக்கடிகள் ஏற்படவில்லை. களமிறங்கிய அனைவரும் ஓரளவுக்குச் சிறப்பான பங்களிப்பு கொடுத்த நிலையில், சாம் பில்லிங்ஸ் 67 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கேப்டன் இயான் மோர்கன் தனது பங்கிற்கு 36 ரன்கள் சேர்ந்திருந்தார். அயர்லாந்து அணி சார்பில் கிரேயக் யெங் 2 விக்கெட்களை கைப்பற்றிருந்தார். இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சூப்பர் லீக் தகுதி சுற்றில் இங்கிலாந்து அணிக்கு 10 புள்ளிகள் கிடைத்துள்ளன

Be the first to comment on "இங்கிலாந்து vs அயர்லாந்து: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.


*