இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது.

களத்தில் தொடுதலை தவிர்ப்பது, சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை சானிடைசரால் கழுவுவது, உடலோடு உரசி கொண்டாடுவதை தவிர்ப்பது என்று வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை.

இதனால் வெறிச்சோடிய மைதானத்தில் வித்தியாசமான சூழலில் வீரர்கள் விளையாடப்போகிறார்கள். அது மட்டுமின்றி கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்க ஐ.சி.சி. தற்காலிகமாக தடை விதித்து இருக்கிறது.

இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் இந்த டெஸ்டில் ஆடவில்லை. தனது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் அவர் விலகி விட்டார். அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முதல்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஜோ ரூட் இல்லாதது இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையில் பலவீனத்தை ஏற்படுத்தும்.

இங்கிலாந்தின் 81-வது டெஸ்ட் கேப்டனாக அடியெடுத்து வைக்கும் பென் ஸ்டோக்ஸ் நேற்று கூறுகையில், ‘உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யும்படி ஜோ ரூட் எனக்கு தகவல் அனுப்பினார். அவர் எப்போதும் மற்ற வீரர்களிடம் ஆலோசனை கேட்பார். அதை நானும் பின்பற்றுவேன்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோ, ஹெட்மயர் ஆகியோர் கொரோனா பீதியால் விலகியது அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். இருப்பினும் பேட்டிங்கில் ஷாய் ஹோப், ஹோல்டர், ரோஸ்டன் சேஸ், பிராத்வெய்ட் நம்பிக்கை அளிக்கிறார்கள். பந்து வீச்சிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஓரளவு வலுவுடன் காணப்படுகிறது. அதனால் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் கூறுகையில், ‘கெமார் ரோச், ஹோல்டர், கேப்ரியல் ஆகியோர் எங்களது முன்னணி பவுலர்கள் என்பதை அறிவோம். ஆனால் அல்ஜாரி ஜோசப்பும் நன்றாக பந்து வீசுகிறார். இந்த தொடரில் அவர் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன். பேட்ஸ்மேன்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கடினமாக உழைத்து வருகிறார்கள்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. முதல் 2 நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment on "இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்"

Leave a comment

Your email address will not be published.


*