இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது போட்டியில் நடப்பு உலகக் கோப்பை சாம்பியன் வெற்றிபெற்றுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. பேர்ஸ்டோ டக்அவுட் ஆனார். ஜேசன் ராய் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஏழு ஓவர்கள் முடிவதற்குள் தொடக்க வீரர்கள் இருவரும் வெளியேறினர். ஜோ ரூட், இயான் மோர்கன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த ஆரம்பித்த நிலையில், ரூட் 39, மோர்கன் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நடுவரிசை பேட்ஸ்மன்கள் பட்லர், பில்லிங்ஸ் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் என ஸ்கோர் இருந்தபோது, டாம் கரன், அடில் ரஷித் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர்.

டாம் கரன் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரஷித் 35 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. ஆடம் ஜம்பா 3 விக்கெட்களை கைப்பற்றியும், ஸ்டார்க் 2 விக்கெட்களை சாய்த்தும் இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தனர். 232 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கிப் பயணித்த ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியளித்தது.

வார்னர், ஸ்டோனிஸ், மார்ஸ், மேக்ஸ்வெல் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் பிஞ்ச், லபுசேன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிஞ்ச் 73 ரன்களும், லபுசேன் 48 ரன்களும் சேர்த்தனர். அலேக்ஸ் கேரி தனது பங்கிற்கு 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, ஆஸ்திரேலிய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது.

ஆர்ச்சர், சாம் கரன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர். முதல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்த இங்கிலாந்து, இப்போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, தனது பலத்தை நிரூபித்துள்ளது.

ஆர்ச்சருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. உலகக் கோப்பை சூப்பர் லீக் தொடரின் ஒருபகுதியாக நடைபெறும் இத்தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி வருகிற 16ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி 24 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி"

Leave a comment

Your email address will not be published.


*