இங்கிலாந்துக்கு எதிரான டி-20; இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

India vs England India won by 7 wickets
India vs England, India won by 7 wickets

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே சோதனை காத்திருந்தது. இந்திய பவுலர் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர்(0) எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். யுஸ்வேந்திர சாஹல் வீசிய 9வது ஓவரில் மலான்(24 ரன்கள்) எல்.பி.டபில்யூ. ஆனதில் இந்த ஜோடியும் பிரிந்தது. இதனை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ இருவரும் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் இயன் மார்கன் 28 ரன்களுடன் ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி நடையை கட்டினார். இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது.

இதனை தொடர்ந்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல்-இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல்(0) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் கோலியுடன், இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இவர்களது ஜோடி களத்தில் ரன் வேட்டை நடத்தியது. இஷான் கிஷன் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு, 56 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தனது முதல் டி-20 அரைசதத்தை இஷான் கிஷன் பதிவு செய்தார். மறுபுறம் விராட் கோலி 49 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார்.

அடில் ரஷீத் வீசிய 10வது ஓவரில் இஷான் கிஷன் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் கோலியுடன் ஜோடி சேர்ந்து 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். 14 வது ஓவரில் இங்கிலாந்து பவுலர் ஜோர்டன் வீசிய பந்தில் ரிஷப் பண்ட் கேட்ச் ஆகி வெளியேறினார். நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி 73 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், இந்திய அணி 17.5 ஓவர்களில் 166 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Be the first to comment on "இங்கிலாந்துக்கு எதிரான டி-20; இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி"

Leave a comment