டெல்லி: கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து இந்திய அணி 2-1 என்று முன்னிலை வகித்த நிலையில், கொரோனா காரணமாக 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடவுள்ளது. மேலும் இதற்கான இந்திய அணி குழு கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. ஆனால் அஷ்வின், ரோஹித் ஷர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோர் செல்லவில்லை.
மேலும் இத்தொடருக்கு கொரோனா பயோ பபுள் கிடையாது என்பதால், 21ஆம் தேதிக்குள் வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கிலாந்து சென்று இந்திய அணியில் இணைந்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டது. அதன்படி ரோஹித் ஷர்மா கடந்த 17ஆம் தேதியன்று புறப்பட்டு சென்றார்.
அவரைத்தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியை முடித்துக் கொண்டு 20ஆம் தேதியன்று இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றனர். ஆனால் காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை தவறவிட்ட கே.எல்.ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் வெளியேறினார்.
இந்நிலையில் அஷ்வின் குறித்து எந்தவொரு தகவலும் வெளிவராத நிலையில், அஷ்வினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியுடன் அவர் செல்லவில்லை என்றும் அவர் தனிமைப்படுத்திக்கொண்டு சிகி்ச்சை பெற்று வருகிறார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் 35 வயதான சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முழுமையாக குணமடையாத நிலையில், அவருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் காத்திருப்பு வீரராக கருதப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கொரோனா பாதித்த அஷ்வின், கோவிட் நடைமுறைகள் விதிகளுக்கு இணங்க அனைத்தையும் கடைப்பிடித்து பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறார் என்றும் கிரிக்பஸ் இணையதளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின் இந்தியாவுக்காக 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 442 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 5 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உட்பட 2,931 ரன்களை இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற ஜூலை 1ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவிருக்கும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, லீசெஸ்டர்ஷைர் கவுண்டி மைதானத்தில் பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி ஜூலை 24ஆம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கிறது. ஆனால் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இணையும் அஷ்வின் பயிற்சி ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Be the first to comment on "இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணியில் இணைகிறார்."