லண்டன்: லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது. இதில் டிராவிஸ் ஹெட் 146(156) ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 95(227) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 31ஆவது டெஸ்ட் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் அணிக்கு பக்கபலமாக இருந்த டிராவிஸ் ஹெட் கூடுதலாக 17 ரன்கள் சேர்த்து 163(174) ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, மறுமுனையில் 121(268) ரன்களை குவித்திருந்த ஸ்மித்தின் விக்கெட்டை ஷர்துல் தாக்கூர் கைப்பற்றினார்.
அதன்பின் இவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் அலெக்ஸ் கெரி மட்டும் 48(69) ரன்கள் எடுத்திருந்த நிலையில், மற்ற வீரர்களான கேமரூன் க்ரீன் 6(7), மிட்செல் ஸ்டார்க் 5(20), நாதன் லையன் 9(25) ,கம்மின்ஸ் 9(34) ஆகியோர் பெரியளவில் சோபிக்காததால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்திருந்தது. இதில் இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாட களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா- ஷுப்மன் கில் ஜோடியில் பேட் கம்மின்ஸ் வீசிய 6ஆவது ஓவரில் ரோஹித் ஷர்மா 15(30) ரன்களில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில், ஸ்காட் போலண்ட் வீசிய அடுத்த ஓவரிலேயே 13(15) ரன்களில் போல்டாகி வெளியேறினார்.
அதன்பின்னர் களமிறங்கிய சட்டேஷ்வர் புஜாரா 14(25) ரன்களில் கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் போல்டாக, தொடர்ந்துவந்த விராட் கோலியும் 14(31) ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான பந்துவீச்சின் மூலம் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப இந்திய அணி தடுமாறியது. ஆனால் அதன்பின் பார்ட்னர்ஷிப் அமைத்த அஜிங்கியா ரஹானே- ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இந்நிலையில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது 48(51) ரன்களில் நாதன் லையன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அரைசதம் கடக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இவரைத்தொடர்ந்து ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த கே.எஸ்.பரத் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை மட்டுமே எடுத்திருந்த இந்திய அணி, 318 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்று முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. இதில் ரஹானே 29(71)ரன்களுடனும், பரத் 5(14) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
Be the first to comment on "ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பிடியை இறுக்கியதால் 318 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணி"