ஆஸ்திரேலிய அணி சாதனை வெற்றி: பௌலர்களை புரட்டி எடுத்த மேக்ஸ்வெல்!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2–1 என்ற கணக்கில் வென்றது. தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது. ஆஸ்திரேலியா இப்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புரவலர்களுக்கு எதிராக இங்கிலாந்தில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ராய், ரூட் ஆகியோர் முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் கோல்டன் டக் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். பேர்ஸ்டோ நிலைத்து நின்று விளையாடி 112 ரன்கள் எடுத்தார். நடுவரிசையில் பார்ட்னர்ஷிப் அமைத்த பில்லிங்ஸ் 57 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 53 ரன்களும் சேர்த்தனர். 50 ஓவர்கள் முடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது. ஸ்டார்க், ஜம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். கம்மின்ஸ் ஒரு விக்கெட் எடுத்தார்.

303 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கிப் பயணித்த ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் படுமோசமாகச் சொதப்பியது. முதல் வரிசை பேட்ஸ்மேன்களான வார்னர், பிஞ்ச், லபுசேன் ஆகியோர் நிலைத்து நின்று ஆடத் தவறியதால், 73 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்தது. போட்டி பெரும்பாலும் இங்கிலாந்துக்குச் சாதகமாக இருந்த நிலையில், விக்கெட் கீப்பர் அலேக்ஸ் கேரி, மேக்ஸ்வெல் வரலாற்றுச் சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அலேக்ஸ் கேரி 106, மேக்ஸ்வெல் 90 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து 212 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தனர். இறுதியாக ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டார்க் பேட்டிங் செய்ய அடில் ரஷித் பந்துவீசினார். முதல் பந்தில் ஆறு ரன்கள் கிடைத்தது. இதையடுத்து நான்காவது பந்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக் கனியைப் பறித்தது.

கிறிஸ் வோக்ஸ், ரூட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை சாய்த்தனர். ஆர்ச்சர், அடில் ரஷித் ஒரு விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கிளென் மேக்ஸ்வெல் தட்டிச் சென்றார். 2023 உலகக் கோப்பை தொடருக்குத் தகுதிச் சுற்றான சூப்பர் லீக் தொடரின் ஒரு பகுதியாக இத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 20 புள்ளிகளும், இங்கிலாந்து 10 புள்ளிளும் பெற்றுள்ளது. சூப்பர் லீக் தொடரில் வெற்றிபெறும் அணிக்கு 10 புள்ளிகளும், டிரா அல்லது கைவிடப்படும் போட்டிகளில் இரு அணிகளுக்கும் தலா 5 புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "ஆஸ்திரேலிய அணி சாதனை வெற்றி: பௌலர்களை புரட்டி எடுத்த மேக்ஸ்வெல்!"

Leave a comment

Your email address will not be published.


*