ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி குறித்து ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100348940
Rohit Sharma of India during the India team practice session and press conference held at the Saurashtra Cricket Association Stadium in Rajkot, India on the 26th September 2023 Photo by: Saikat Das/ Sportzpics for BCCI

மும்பை: 8வது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற கையோடு ஐசிசி 2023 உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் இந்திய அணி, அதற்குமுன் இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மா போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் கே.எல்.ராகுல் தலைமையில் விளையாடிய இந்திய அணி, அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று, தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறியுள்ளது. இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே உலகக் கோப்பை தொடருக்கு முன்பு விளையாடப்படும் கடைசிப் போட்டி என்பதால் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பலரும் இந்த ஆட்டத்தில் பங்கேற்று விளையாடி, 3- 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை ஒய்ட்வாஷ் செய்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டிக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிளேயிங் லெவனில், சில வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லாமலும், குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். மேலும் தற்போது 13 வீரர்கள் மட்டுமே களமிறங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கும் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாண்டியா, அக்ஸர் படேல், ஷர்துல் தாக்கூர், ஷுப்மன் கில், முகமது ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய இந்த நிலை கவலையை கொடுத்தாலும், உலகக்கோப்பையில் அனைத்து வீரர்களும் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதற்கு வழிவகை செய்யும் என்று ரோஹித் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் அணியில் சில வீரர்களுக்கு உடல்நிலை சரியில்லை. மேலும் பல வீரர்களுக்கு சொந்த பிரச்சினைகள் இருக்கிறது. ஆகையால் அதில் சிலருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

எங்களின் தற்போதைய இந்திய அணியில் 13 பேர் மட்டுமே இருக்கிறோம். இதில் ஷுப்மன் கில் ஓய்வு பெற்றுள்ளார். ஷமி, பாண்டியா மற்றும் தாகூர் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக இப்போட்டியில் இடம்பெறவில்லை. இந்திய அணியின் தற்போதைய சூழ்நிலை வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் இந்த நேரத்தில் அணியில் நிலவும் நிலையற்ற தன்மைக்கு எங்களால் உதவ முடியாது.

மேலும் அக்ஸர் படேலுக்கு ஏற்பட்ட காயம் குறித்து அடுத்த சில வாரங்களில் தெரிய வரும். ஒவ்வொரு வீரர்களின் உடல்நலத்தின் மீது கவனம் கொடுப்பது எங்களுடைய முக்கியமான வேலையாகும். எனவே தற்போது அவர்கள் வீட்டில் இருப்பதே நல்லதாகும். ஏனெனில் அவர்கள் புத்துணர்ச்சியுடன் ஐசிசி உலக கோப்பையில் கம்பேக் கொடுக்க வேண்டும் ” இவ்வாறு ரோஹித் ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி குறித்து ரோஹித் ஷர்மா அறிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*