ஆஸி ஆல்-அவுட்: இந்தியாவிற்கு கடின இலக்கு!

பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது (கடைசி) டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 369/10 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 336 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆன நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை 294/10 ரன்களுக்கு முடித்துக் கொண்டு, இந்திய அணிக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்காவது நாள் இரண்டாவது செஷன் நிறைவடைந்தபோது பேட் கம்மின்ஸ் 2 (16), மிட்செல் ஸ்டார்க் 1 (1) களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கடைசி செஷன் துவங்கியவுடன் ஸ்டார்க் ஒரு ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இந்திய பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால், லாதன் லைன் 13 ரன்களுக்கும், ஜோஸ் ஹேசில்வுட் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 294 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி, 328 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

இந்தியத் தரப்பில் முகமது சிராஜ் 5 விக்கெட்களையும், ஷர்துல் தாகூர் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். தற்போது துவக்க வீரர்கள ரோஹித் ஷர்மா 4* (6), ஷுப்மன் கில் 0* (5) களத்தில் உள்ளனர். மழை காரணமாக நான்காவது நாள் ஆட்டத்தின் கடைசி செஷன் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.

நாளைய ஆட்டத்திலும் மழை குறுக்கீடு இருக்கும். குறிப்பாகக் கடைசி செஷனில் மழை பெய்யும் என பிரிஸ்பேன் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், முதல் இரண்டு செஷன்களில் இந்திய அணி அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகள் முடிந்து இரு அணிகளும் 1-1 எனச் சமநிலையில் உள்ளன. தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவித்தபோது விராட் கோலியின் பெயர் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே இடம்பெற்றிருந்தது. எஞ்சிய போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார், தனது மனைவி பிரசவத்தின்போது அருகில் இருப்பதற்காக நாடு திரும்புவார் என பிசிசிஐ அறிவித்து ஷாக் கொடுத்தது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை விராட் கோலி இல்லாமல் எப்படி எதிர்கொள்வது என ரசிகர்கள் மத்தியில் அச்சம் நிலவியது. 4-0 என ஆஸ்திரேலிய அணி வெல்வது உறுதி எனப் பல கிரிக்கெட் பிரபலங்கள் பேட்டி கொடுத்து அச்சத்தை அதிகப்படுத்தினர்.

இந்த எதிர்மறை கணிப்புகளைப் பொய் என நிரூபிக்கும் வகையில் விராட் கோலி இல்லாத கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி செயல்பட்டு வருகிறது.

Be the first to comment on "ஆஸி ஆல்-அவுட்: இந்தியாவிற்கு கடின இலக்கு!"

Leave a comment

Your email address will not be published.


*