லக்னோ: 16ஆவது ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று பலபரிட்சை நடத்தின. ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஃபாப் டூப்ளெசிஸ்- விராட் கோலி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர் .ஆனால் முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில், கோஹ்லி 31(30) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவரைத்தொடர்ந்து களமிறங்கிய அனுஜ் ராவத் 9(11), மேக்ஸ்வெல் 4(5), பிரபுதேசாய் 6(7) ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் டூபெளசிஸுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் நிலைத்துநின்று விளையாடிய டூபெளசிஸ் 44(40) ரன்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்துவந்த லோம்ரர் 3(4) ரன்களில் எல்பிடபள்யூ முறையில் வெளியேறினார்.
இறுதியில் தினேஷ் 16(11) ரன்கள் எடுத்து நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் ரன் அவுட்டாகி வெளியேற, அடுத்துவந்த கரண் சர்மா 2(2), முகமது சிராஜ் 2(2) ஆகியோர் வந்த வேகத்திலேயே நடையைக்கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி 126 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய், அமித் மிஷ்ரா தலா 2 விக்கெட்டுகளையும், கிருஷ்ணப்பா கவுதம் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அதிரடி தொடக்க வீரர் கைல் மேயார்ஸ், முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி முகமது சிராஜிடம் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஆயூஷ் பதோனி 4(11), தீபக் ஹூடா 1(2), குர்னால் பாண்டியா 14(11), நிக்கோலஸ் பூரன் 9(7) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இவர்களைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட மார்கஸ் ஸ்டொய்னிஸ் 13(19) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே கிருஷணப்பா கவுதமும் 23(13) ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின்னர் களமிறங்கிய ரவி பிஷ்னோய் 5(10) ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, அடுத்துவந்த நவீன் உல் ஹக் அமீத் மிஷ்ராவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். இந்நிலையில் நவீன் 13(13) ரன்களில் ஆட்டமிழக்க, அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது.
இருப்பினும் மிஷ்ரா கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து 19(30) ரன்களுடன் ஆட்டமிழந்ததால், 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி சார்பில் ஹேசல்வுட், கரண் சர்மா தலா 2 விக்கெட்களையும், சிராஜ், மேக்ஸ்வெல், ஹசரங்கா, ஹர்சல் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Be the first to comment on "ஆர்சிபி அணியின் சிறப்பான பந்துவீச்சால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது."