‘ஆட்டநாயகன்’ விருது பற்றி ட்வீட் போட்ட சஞ்ஜய் மஞ்ரேக்கர்.. உடனே ஒரு கேள்வி கேட்டு வம்பிழுத்த ரவிந்திர ஜடேஜா..!

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா முன்னாள் வீரர் சஞ்ஜய் மஞ்ரேக்கரை சீண்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா. இவரை முன்னாள் வீரர் சஞ்சய்மஞ்ரேக்கர் சீண்டிய சம்பவம் பரபரப்பானது அனைவருக்கும் தெரியும் இந்நிலையில் தற்போது ரவிந்திர ஜடேஜா மஞ்ரேக்கரை வம்புக்கு இழுத்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் கே.எல். ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது தொடர்பாக சஞ்சய் மஞ்ரேக்கர் கூறிய கருத்துக்கு ரவிந்திர ஜடேஜா ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்விட்டர் மோதல்

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. இதில் 7  விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், ‘இந்த போட்டியில் பவுலருக்குதான் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்’ என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதைப்பார்த்த ரவிந்திர ஜடேஜா சஞ்சய் மஞ்ரேக்கரை சீண்டும் விதமாக “அந்த பவுலரின் பெயரை தயவு செய்து குறிப்பிடுங்கள்” என நக்கலாக கேள்வி எழுப்பினார். இதைப்பார்த்த சஞ்சய் மஞ்ரேக்கர் அளித்துள்ள பதிலில் “ஹா…ஹா… உங்களுக்கு அல்லது பும்ராவுக்கு. ஏன்னென்றால் பும்ரா 3, 10, 18 மற்றும் 20ஆவது ஓவர்களில் ரன்களை சிறப்பாக கட்டுப்படுத்தினார்.

மறைமுக கேள்வி

இப்போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த ரவிந்திர ஜடேஜா 4 ஓவர்கள் பவுலிங் செய்து வெறும் 8 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். இதனால் ஆட்டநாயகன் விருது தனக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவே இப்படி ஒரு கேள்வியை ரவிந்திர ஜடேஜா எழுப்பியதாக தெரிவதாக சில ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முதல் மோதல்

முன்னதாக கடந்த 2019 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் போது, ரவிந்திர ஜடேஜாவை சல்லி வீரர் என நேரடியாகவே விமர்சனம் செய்தார். இதற்கு கடுப்பான ரவிந்திர ஜடேஜா அளித்த பதிலில், “உன்னைவிட இருமடங்கு போட்டிகளில் நான் பங்கேற்றுள்ளேன். இன்னும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டுள்ளேன். வீரர்களின் சாதனைக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள்” என பதிலடி கொடுத்தார். இதற்கிடையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி -20 போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 29) ஹாமில்டனில் நடக்கிறது.

Be the first to comment on "‘ஆட்டநாயகன்’ விருது பற்றி ட்வீட் போட்ட சஞ்ஜய் மஞ்ரேக்கர்.. உடனே ஒரு கேள்வி கேட்டு வம்பிழுத்த ரவிந்திர ஜடேஜா..!"

Leave a comment

Your email address will not be published.


*