நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து ஆடுகளத்துக்கு ஏற்றவாறு பேட்டிங்கை மாற்றியதாக ஆட்டநாயகன் விருதுபெற்ற ராகுல் தெரிவித்தார்.
ஆக்லாந்தில் நடந்த இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதலில் விளையாடியது. அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்னே எடுக்க முடிந்தது.
குப்தீல் 20 பந்தில் 33 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), டிம்செய்பெர்ட் 26 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஜடேஜா 2 விக்கெட்டும், ஷிவம்துபே, பும்ரா, ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
133 ரன் இலக்குடன் இந்திய அணி விளையாடியது.
ராகுல்- ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
இந்தியா 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் ராகுல் 50 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 33 பந்தில் 44 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். சவுத்தி 2 விக்கெட்டும், சோதி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஏற்கனவே ஆக்லாந்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. தற்போது 2-வது ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆடுகளத்துக்கு ஏற்றவாறு பேட்டிங்கை மாற்றியதாக ஆட்டநாயகன் விருதுபெற்ற லோகேஷ் ராகுல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆக்லாந்து ஆடுகளம் முதல் போட்டியில் இருந்ததை போல இல்லை. சிறிது கடினமாகவும், பந்துகள் மெதுவாகவும் வந்தன. இலக்கு வித்தியாசம், மாறுபட்ட சூழல், பிட்சும் மாறியது ஆகியவற்றால் எனது ஆட்டத்திலும் மாற்றம் செய்தேன்.
சீனியர் வீரர்களான ரோகித்சர்மாவும், விராட் கோலியும் எளிதில் ஆட்டம் இழந்து விட்டதால் நிலைத்து நின்று ஆட வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது. நான் நிலைத்து விளையாடி ஆட்டத்தை முடித்து வைத்தேன்.
ஆட்டத்தையும், சூழ்நிலையையும் புரிந்து கொண்டு ஆடியதை நான் சிறப்பானதாக கருதுகிறேன். எப்போதும் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்று என்ன தேவையோ அதை கொடுக்க முடியும். இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் வருகிற 29-ந் தேதி ஹேமில்டனில் நடக்கிறது.
Be the first to comment on "ஆடுகளத்துக்கு ஏற்றவாறு பேட்டிங்கை மாற்றினேன் – லோகேஷ் ராகுல்"