செஜியாங்: வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காக ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தயாராகி வரும் அதேசமயம் சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் விளையாட ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் இந்திய அணி சீனா சென்றுள்ளது. அங்கு இளம் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் நேபாள அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாத இளம் வீரர்களைக் கொண்டு ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியில் சிறந்த அணியாக இந்த அணி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே சிறப்பாக விளையாடி தங்கம் வென்ற இந்திய மகளிர் அணி போலவே இந்திய ஆடவர் அணியும் ஐசிசி தர வரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் நேரடியாக காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றள்ளது.
அதன்படி அக்டோபர் 3ஆம் தேதியான இன்று இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் தகுதிச்சுற்றில் மங்கோலியாவை அடித்து நொறுக்கி பல உலக சாதனைகளை படைத்துள்ள நேபாள அணியை இளம் இந்திய அணி எதிர்கொள்வது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குமுன் ஒரு பேட்ஸ்மேனாக தன்னுடைய திறமையை நிரூபித்துள்ள ருதுராஜ் கேப்டனாக எப்படி செயல்பட போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தை கொண்ட ருதுராஜ், ஐபிஎல் தொடரில் 3 உலகக் கோப்பைகளை வென்ற மகத்தான தோனியின் தலைமையில் விளையாடியுள்ளார்.
எனவே தோனியிடமிருந்து அவர் கற்றுக்கொண்ட கேப்டன்ஷிப் பண்புகளை இத்தொடரில் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ருதுராஜ் கெய்க்வாட் “தோனியிடம் இருந்து நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். அந்த வகையில் அவருடைய பாணி வித்தியாசமானது. அவருடைய ஆளுமையும் வித்தியாசமானது. எனவே நான் நானாக இருக்கவே முயற்சி செய்வேன். அவர் வழக்கமாக என்ன செய்வார் என்பதை மட்டும் பார்க்காமல் நான் என்னுடைய வழிகளை பின்பற்றி செயல்பட உள்ளேன்.
அதேசமயம் எப்படி கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது போட்டியின் போது முக்கிய வீரர்களை எப்படி கையாள்வது போன்ற அவர் செய்த சிறப்பான விஷயங்களையும் நாம் பின்பற்றுவது அவசியமாகும். இதைத்தான் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். இருப்பினும் நான் என்னுடைய வழியில் அணியை வழி நடத்த விரும்புகிறேன். வீரர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு முடிந்தவரை சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது இந்திய வீரர்களுக்கு ஒரு வாய்ப்பு மற்றும் பெருமையான விஷயம். நான் மிகவும் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்நோக்குகிறேன். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கத்தை வென்றது போலவே நாங்களும் வெல்ல விரும்புகிறோம்” இவ்வாறு ருதுராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Be the first to comment on "ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று தருவதே எனது குறிக்கோள், ருதுராஜ் கெய்க்வாட்"