அயர்லாந்து டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில், ராகுல் திரிபாதிக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-10571.

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெனனாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. கடந்த ஜூன் 9ம் தேதி தொடங்கிய இத்தொடர் வருகின்ற ஜூன் 19ம் தேதியுடன் முடிவடைகின்றது.

இத்தொடருக்குப் பிறகு இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. மேலும் இப்போட்டிகள் வருகின்ற ஜூன் 26 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் ரோகித் ஷர்மா மற்றும் ராகுல் டிராவிட் தலைமையிலான சீனியர் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. அதுமட்டுமின்றி கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி பங்கேற்று வரும் ஜூலை 1ஆம் தேதி விளையாடவுள்ளது. இடைவெளியின்றி போட்டிகள் நடைபெறுவதால் இரண்டு அணியை ஒரே சமயத்தில் பிசிசிஐ அனுப்பவுள்ளது.

எனவே அயர்லாந்து தொடருக்கு எதிராக விளையாடுவதற்கு 17 பேர் கொண்ட இளம் இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதன்படி அந்த அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும்  துணை கேப்டனாக புவனேஷ்வர் குமார் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இத்தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் தென்னாப்பிரிக்கா தொடரில் காயம் காரணமாக பங்கேற்காத கே.எல்.ராகுல் அயர்லாந்து தொடரில் இடம்பெறவில்லை. அதேபோல தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்படும் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் முக்கியமான வீரர் என்பதால் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான தொடரில் பங்கேற்ற பல வீரர்கள் இதில் அடங்கியுள்ளனர். அத்துடன் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த சூர்யகுமார் யாதவ் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

இவர்களுடன் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 400 ரன்களுக்கு மேல் அடித்து ,தனது சிறப்பான பேட்டிங்கிற்காக வெகுமதி பெற்ற மகாராஷ்டிராவின் வலது கை பேட்டர் ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஏனெனில் இந்திய அணியில் திரிபாதியை சேர்க்க முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்த நிலையில், அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று அயர்லாந்து கிரிக்கெட் வாரியமும் இத்தொடருக்கான அணியை நேற்று அறிவித்துள்ளது. அதன்படி அந்த அணியில் அறிமுக வீரர்களாக கோனார் ஓல்பர்ட் மற்றும் ஸ்டீபன் டோஹனி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Be the first to comment on "அயர்லாந்து டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில், ராகுல் திரிபாதிக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*